July 12, 2017 தண்டோரா குழு
மும்பை மெட்ரோ ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்களை அந்த மாநில அரசு வைத்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு மூலம் ஏற்படும் மாசுகளை குறைப்பதற்காகவும் மறுசுழற்சி முறையை மக்கள் பின்பற்றவும், மும்பை மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்களை மும்பை ரயில்நிலையங்களில் வைத்துள்ளது. இந்த இயந்திரத்திற்கு ‘கிராஷேர்’ என்று பெயர்.
மும்பை நகரின் டிஎன் நகர், அந்தேரி, சக்களா, மரோல் நகா, மற்றும் காட்கோபர் ஆகிய ரயில்நிலையங்களில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருள்களை அதில் போடும்போது, அவை நொறுக்கப்படுகிறது. அதை பயன்படுத்துவோருக்கு கூப்பன் மூலம் ஆடை, கண்ணாடிகள் ஆகியவற்றை வாங்குவதற்கு 2௦ முதல் 25 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த இயந்திரம் மூலம், ஒவ்வொரு நாளும் சுமார் 5௦௦௦ பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்க முடியும்.
இந்த இயந்திரத்தை மக்கள் உபயோகிக்க ஊக்கமளிக்கும் வகையில் தள்ளுபடி கூபன் தருவதால் அதிகப்படியனோர் பயன்படுத்துகின்றனர் என்று MMOPL நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
மேலும்,நொறுக்கப்பட்ட பாட்டில்கள் நார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் மூலம், துணி, கார்பெட்ஸ் மற்றும் மளிகை பொருள் வாங்கும் பைகளை தயாரிப்பதற்கு மூல பொருள்களாக பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய குறைந்த அளவில் செலவு செய்யும் விதமாக இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.