July 15, 2017
தண்டோரா குழு
முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க 3 வாரம் காலஅவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா அரசு அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்க முடியாது. அணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தது.
இதனால் தமிழகம் மற்றும் கேரளா அதிகாரிகள் இடையே விரோத போக்கு ஏற்பட்டது. இரு மாநில எல்லைகளிலும் மக்கள் பதற்றத்துடனே காணப்பட்டனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க 3 வாரம் காலஅவகாசம் அளித்தனர்.