March 8, 2017 தண்டோரா குழு
தமிழக மீனவர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தகவல்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்டாவில் “இந்திய பெருங்கடல் ரிம் கழகத்தின்”( IORA) மூன்று நாள் மாநாடு மார்ச் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். அதே போல் இந்த மாநாட்டில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் கலந்து கொண்டார்.
இதனிடையே மாநாட்டின் இறுதி நாள் முடிவில் ஹமீத் அன்சாரி சிறிசேனவை சந்தித்து தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பேசி உள்ளார் எனக் கூறப்படுகிறது.
“இலங்கை கடற்படை சார்பில் அப்படி எந்த தாக்குதலும் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படவில்லை. எனினும் இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்று சிறிசேனா, அன்சாரியிடம் தெரிவித்துள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.