March 28, 2016 வெங்கி சதீஷ்
தி.மு.க என்றாலே குடும்பக் கட்சி என்ற நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. தனது மகன்கள் மற்றும் மகளைத் தீவிர அரசியலில் இறக்கிவிட்டார் தலைவர் கருணாநிதி. இதனிடையே அவரது மருமகன்களான முரசொலிமாறனின் மகன்களும் சன் குழுமத்தின் பங்குதாரர்களுமான கலாநிதிமாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரில் தயாநிதி மாறன் தேசிய அரசியலில் ஈடுபட்டு மத்திய மந்திரியாகவும் இருந்தார். பின்னர் அவரது சகோதரரின் பத்திரிகையில் அடுத்த தி.மு.க தலைவர் யார் என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஸ்டாலின் என அதிக வாக்குகள் வந்ததை அடுத்து ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே பிரச்சனை உருவானது. பின்னர் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின் அழகிரி தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வின் ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அழகிரி இனி தி.மு.க உருப்படாது எனப் பேட்டி கொடுத்தார். இதனால் விரிசல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தி.மு.கவுடன் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டதால் வேறு முக்கிய கட்சிகள் யாரும் அவர்களுடன் கூட்டணி வைக்கத் தயங்கினர். மேலும் தே.மு.தி.க தங்களுடன் வரும் என நம்பிக்கொண்டு இருந்த நிலையில் ஸ்டாலினின் பேச்சால் தே.மு.தி.க மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. இதனால் கலைஞர் விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில் அழகிரி எப்போது சென்னை வந்தாலும் தனது தாயை மட்டுமே பார்த்து விட்டு தந்தையை பார்க்காமல் சென்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அழகிரி தனது தந்தையையும் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இது ஸ்டாலினுக்கு கலைஞர் வைக்கும் செக் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது வரை அரசியல் சார்பின்றி இருந்து வந்த ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது பேஷ்புக் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா வைக்கோவின் சட்டையையும், வைகோ ஜெயலலிதாவின் கோட் போன்ற உடையையும் போட்டிருப்பது போல ஒரு பதிவை போட்டுள்ளார்.
இதன் மூலம் அவரையும் அரசியலில் இறக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது முழுக்க முழுக்க கலைஞர் அழகிரி சந்திப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.