February 15, 2017 தண்டோரா குழு
மேற்கு வங்கத்தில் 3 போலி புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகளை தேசிய புலனாய்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) பறிமுதல் செய்தது. அம்மாநிலத்தின் மால்டா பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“புதிய 2,௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்ததை அடுத்து, போலி 2,௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்தன. பல இடங்களிலிருந்து இந்த ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம். ஆனால், அவை தரம் தாழ்ந்தவை. பல ரூபாய் நோட்டுகள் ‘ஸ்கேன்’ செய்த நகல்கள் என்று சோதனையில் தெரிய வந்தது. செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் அதிக தரம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது” என்றார்.
போலி இந்திய நாணயத் தாள்கள் (FICN) கடத்திய குற்றத்திற்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உமர் பாருக் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெளிவந்த தகவலின்படி, “மற்றொரு போலி இந்திய நாணயத் தாள்கள் (FICN) மோசடி நபரிடம் போலி 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளை கொடுக்கச் சென்றபோது உமர் பாருக்கைக் கைது செய்தனர். புதிய 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் கள்ள நோட்டுகளை உருவாக்கப் பின்பற்றப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய வங்க தேசத்தின் எல்லையில் பாதுகாப்புப் படையினர் 40 போலி 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. “செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் எல்லையில் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளை விட தரம் வாய்ந்ததாக இருக்கிறது” என்று அதிகாரி தெரிவித்தார்.
பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளின் தரம் அதிகமாக இருக்கும்போதுதான் தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யும். ஆகவே, இதற்கு முன் பறிமுதல் செய்த 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளின் வழக்கில் சம்பந்தப்படவில்லை.
“போலி இந்திய நாணயத் தாள்கள் (FICN) நாட்டின் எல்லை தாண்டி கடத்தப்படுவதுதான் நவம்பர் 8ம் தேதி 1,௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட ஒரு காரணம்” என்று இந்திய பிரதமர் வாதிட்டார்.