March 31, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் செம்பாறை பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேத்துமடை என்னும் பழங்குடியினர் வாழும் குடியிருப்புப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வன உரிமை சட்டத்தின் கீழ் செம்பாறை பாளையம், வெள்ளியங்காடு மற்றும் நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட 26 வன கிராமங்களில் சமுதாய உரிமை வழங்குவது குறித்து 19 கிராம சபை குழுவை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கிராமத்துக்கு தேவையான அங்கன்வாடி, மருத்துவமனை, பொது வழி, கோவில் நிலம் இதுபோன்ற பயன்பாட்டிற்கு தேவையான நிலங்களை வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கூட்டாக ஆய்வு செய்து சமுதாய உரிமை வழங்கிடவும், வனப்பகுதியில் கிராம மக்களுக்கு மக்களின் பொருளாதாரம் மேம்பட தேன் சேகரிக்கவும், சீமார் குச்சி எடுப்பது இது போன்ற தொழில் செய்வதை ஊக்குவிக்கவும், வன நிலத்தை பாதுகாப்பது குறித்தும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒருவிழா பழங்குடியினர் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து நடனம் ஆடினர். இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இது அப்பகுதி மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.