February 5, 2022 தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினமும் பயணிகள் ரயில், காலை 8.20 மணிக்கு இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு, மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.
கடந்த ஆண்டு மார்ச் வரை இந்த பயணிகள் ரயில் தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு 5 முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு 5 முறையும் இயக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் 4 மாதங்களாக சிறப்பு ரயில் என்ற பெயரில் கோவைக்கு காலை ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதற்கான ரயில் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலை வழக்கமான நேரங்களில் சாதாரண கட்டண முறையில் இயக்கும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மேட்டுப்பாளையம்-கோவை இடையே மேலும் ஒரு முறை கூடுதலாக ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் 7ம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20க்கு புறப்படும் ரயில் கோவைக்கு காலை 9.05 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் கோவையில் இருந்து, காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில் மேட்டுப்பாளையத்துக்கு 10.30 மணிக்கு சென்றடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு 5.10க்கு கோவை வந்து சேருகிறது.
இந்த ரயில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை ஆகிய 4 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கோவை-மேட்டுப்பாளையம் இடையே உள்ள ஸ்டேஷன்களில் எந்த ரயில் நிலையத்தில் ஏறி இறங்கினாலும், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே, தினசரி இந்த ரயில் சேவையை பயன்படுத்த விரும்பும் பயணிகள் ரூ.185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக்கொண்டு கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணம் செய்யலாம்.
இதுதவிர, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் பெற விண்ணப்பத்துடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதும். அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்றனர்.