May 9, 2016 தண்டோரா குழு
பீகார் சட்டமன்ற உறுப்பினர் மனோரமா தேவியின் மகன் ராக்கி குமார் தனது வாகனத்தை முன்னேற அனுமதிக்காத வாகனத்தின், ஓட்டுநரான ஆதித்யாவை சனிக்கிழமை சுட்டுக்கொன்ற சம்பவம் பீகார் மக்களை மிகவும் உலுக்கியுள்ளது.
ராக்கிகுமார் JDU சட்டமன்ற உறுப்பினர் மனோரமா தேவியின் புதல்வர். இவரது தந்தை பிந்தேஷ்வாரி யாதவ் தாதாவாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்.
மனோரமா தேவியும், பிந்தேஷ் யாதவ்வும் முதலில் RJD கட்சியிலிருந்தனர். போன வருடம் ஜூன் மாதத்தில் மாவட்டத் தேர்தலில் போட்டியிட வேண்டி நிதீஷ் குமாரின் JDU வில் இணைந்தனர்.
பிந்தேஷ் யாதவ், கயாவிலுள்ள ஜங்னாபாட் ஆர்வால் பகுதியில் திகிலூட்டும் தாதாவாகத்திகழ்பவர்.
கடந்த 2011ம் ஆண்டு பெருமளவு வெடிபொருட்களும், AK 47, SLR, கார்பைன் போன்ற 15,000 க்கும் மேற்பட்ட தளவாடங்கள் இவரது வாகனத்திலிருந்து கைப்பற்றப்பட்டது.
அவை நம் நாட்டின் பாதுகாப்பைத் தகர்ப்பதற்காக மாவோயிஸ்ட்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மேல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இறந்த மாணவன் ஆதித்யா சச்தேவ், கயாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகன். புத்கயாவில் ஒரு பிறந்த நாள் விழாவை முடித்துவிட்டு தனது சுவிட் காரில் மூன்று தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்.
பின்னே வந்து கொண்டிருந்த MLA யின் காரை அவரது மகன் ராக்கி குமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அவருடன் கூட அவரது தோழர் ராஜேஷ்குமார் மற்றும் அரசால் மனோரமா தேவிக்கு அளிக்கப்பட்ட மெய்க்காவலரும் இருந்தனர்.
ராக்கிகுமார் தனது வாகனத்தை முன்னேறிச் செல்ல முயற்சி செய்துள்ளார். வழி கிடைக்காத காரணத்தினால், ஆதித்யாவின் காரை வழிமறித்து காரில் இருந்த 4 பேரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
ஆதித்யாவின் தோழர் ஆயுஷ் கூறுகையில் தங்களுடைய கார் முன்னேறிச் செல்ல அனுமதிக்காது, ராக்கி குமார், அவரது தோழர், மற்றும் அவரது மெய்க்காவலர் மூவரும் தங்களைத் தாக்கியதாகக் கூறினார்.
உச்சக் கட்டமாக மிகுந்த கோபங்கொண்ட ராக்கி குமார் தனது SUVவிலிருந்து துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுடத் தொடங்கியுள்ளார்.
நடுக்கமடைந்த ஆதித்யா உட்பட 4 தோழர்களும் தங்களது வாகனத்தில் ஏறித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனே ராக்கிகுமார் தனது துப்பாக்கியால் வாகனத்தை நோக்கிச் சுட்டுள்ளார்.
ஆனால் அது குறி தவறி ஆதித்யாவின் தலையில் பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே காலமானார்.
இது நடந்ததை அடுத்து ராக்கிகுமார் தலைமறைவாகி விட்டார்.
காவல்துறை மெய்க்காவலரை கைது செய்து விசாரித்து வருகிறது.
மேலும் SUV வையும் கைப்பற்றி உள்ளது.
மற்றும் மனோரமா தேவியையும், அவரது கணவரையும் விசாரித்து வருகிறது.
பிந்தேஷ் யாதவ் விசாரணையின் போது, தன் மகன் தற்காப்புக்காகவே சுட்டதாகவும், இது ஒரு விபத்து என்றும், ஆதித்யா மற்றும் அவரது தோழர்கள் 3 பேரும் மது அருந்தியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
கோபமுற்ற மக்கள் MLA யின் மகனைக் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டத்தைக் கையில் எடுக்க எவரையும் சட்டம் அனுமதிக்காது என்று JDU வைச் சேர்ந்த அலி அன்வர் கூறியுள்ளார்.