May 3, 2017 தண்டோரா குழு
பிரதமர் மோடியை விமர்சித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிடப்பட்டது தொடர்பாக வாட்ஸ் ஆப் குழு அட்மின் மற்றும் உறுப்பினரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்டவைகளில் அதிகப்படியான தகவல்களும், செய்திகளும் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பலர் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் மீம் கிரியேட்டர்ஸ் எனப்படுவோர் அரசியல் தலைவர்களையும், பிரபலங்களையும் கேலியாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,கர்நாடகாவில், உத்தர கன்னடா மாவட்டம், டோடாபாஸ்லே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணா சனதாமா என்பவர் “த பாஸ் பாய்ஸ்” என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் அப்பகுதியை சேர்ந்த, 40 பேரை உறுப்பினர்களாக இணைத்துள்ளார். அதில், சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி குறித்து மோசமான வாசகங்களுடன், மோடியின் படத்தை தவறான சித்தரித்தும் தகவல்கள் வெளியிடபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதே குழுவை சேர்ந்த ஆனந்த் மஞ்சுநாத் நாயக் என்பவர் அளித்த புகாரின் பேரில் முருதேஸ்வர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் பந்த், இது குறித்து வழக்கு பதிவு செய்து, வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர் பாலகிருஷ்ண நாயக், குழு அட்மின் கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தார்.
இதில், உறுப்பினர் பாலகிருஷ்ணா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குழு அட்மின் நீதிமன்ற காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.