March 11, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சி, பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலைத் துறை சார்பாக சனிக்கிழமை நடைபெற்ற யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் ஆகியோர் கொடியசைத்து யானைகளை வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் கூறியதாவது:
“விலங்குகளிடத்தில் அன்பும், கருணையும் கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோவில் யானைகளைத் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் அவற்றுக்குப் போதுமான ஒய்வு தரவும், சத்தான உணவளித்து முறையாகப் பராமரிக்கவும், உடல்நலத்தைப் பேணவும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று 2003-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்படி இது வரை 9 யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு ரூ. 1,16,85,000 அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான 31 யானைகளும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து 2 யானைகளும் ஆக மொத்தம் 33 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்றுள்ளன.
முகாமிற்கு வர இயலாத யானைகளுக்கு அவை இருக்கும் இடத்திலேயே முகாமில் நடத்தப்படுவது போன்று உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டன. முகாமில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோனைப்படி பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம், பயோ பூஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டன. காலை மாலை இரு வேளையும் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது.
அத்துடன் யானைகளை அன்புடன் பராமரிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் எல்லா யானைப் பாகன்களுக்கும் சிறப்புப் பயிற்சியும் தரப்பட்டது. சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகளின் சிறப்பு நலவாழ்வு முகாமினைச் சுற்றிலும் பாதுகாப்பினைப் பலப்படுத்த சூரிய சக்தி (சோலார்) தொங்கும் மின்வேலி, சோலார் மின்வேலி மற்றும் தகரத் தடுப்பு வேலி ஆகியவை அமைக்கப்பட்டன. காட்டு விலங்குகளின் நடமாட்டத்தினைக் காண்காணிக்கும் வகையில் முகாமில் ஐந்து இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாகன்களின் உடல் நலத்தைக் கண்காணிப்பதற்காக சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ அரங்கு அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்டு தினசரி மருத்துவப் பரிசோதனைகள், உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அதே போன்று தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவர்களைக் கொண்டு தினசரி யானைகளுக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டன” இவ்வாறு அமைச்சர் இராமச்சந்திரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் வீர சண்முகமணி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.