May 15, 2017 தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது பாஜக கருத்து என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என்றும் கூறினார்.
மேலும்,ஒரு விஷயத்தில் தான் ரசிகர்களும், தமிழர்களும் தொடர்ந்து ஏமாந்து வருவதாகவும், அந்த விஷயம் என்ன என்பதை இப்போது கூற முடியாது எனவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். இதனால் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற பேச்சு இப்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,
நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம், ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது பாஜகவின் கருத்து எனவும், அவரது பேச்சின்மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் அரசியலுக்கு வரும் போது நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து என தெரிவித்தார்.
அதைபோல், இளைஞர்கள் தவறான பழக்கங்களை கைவிட வேண்டும், பெற்றோர்களை பேண வேண்டும்,ஊழலற்ற தன்மை உருவாக இளைஞர்களின் பங்களிப்பு பற்றி தனது ரசிகர்களுடன் எனது நண்பர் மதிப்பிற்குரிய அறைகூவல் விடுத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இதனை ஒருமுன் மாதிரியாக கொண்டு பிற கலைஞர்களும் தங்களைப் பின்பற்றும் ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டுமாய் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் என மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.