May 20, 2017 தண்டோரா குழு
காவிரி பிரச்சனை குறித்து பேசியதற்காக சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் தடுத்த போது அவருக்காக ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் சிஸ்டம் கெட்டுப் போச்சு பேச்சு எனக் கூறியது பலவிதமான விவாதங்களையும், சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது,”காவிரிப் பிரச்சினையின்போது அனைவருமே மாநில நலனுக்காக குரல் கொடுத்தோம். அரசும் கொடுத்தது, கட்சிகளும் கொடுத்தன.அதேபோல நடிகர் சத்யராஜும் குரல் கொடுத்தார். அந்த விவகாரத்தில் அனைவருமே தமிழகத்தின் உரிமைக்காகத்தான் குரல் கொடுத்தோம். கர்நாடகத்தைக் கண்டித்தோம். அதேபோலத்தான் சத்யராஜும் குரல் கொடுத்திருந்தார். ஆனால் அவர் நடித்த பாகுபலி படம் வெளியாக விடாமல் கர்நாடகத்தில் தடுத்தனர்.
கர்நாடகத்தில் சத்யராஜுக்காக போராட்டம் நடத்தி அவரை கண்டித்தனர். அப்போது சத்யராஜுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும் ஏன் கொடுக்கவில்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் வட மாநிலங்களை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இங்கு சிஸ்டம் எல்லாம் கெடவில்லை. நன்றாகவே உள்ளது. இதனால்தான் பிற மாநிலத்தவரும் கூட இங்கு வர ஆசைப்படுகின்றனர்” என்று கூறினார்.