January 2, 2018 தண்டோரா குழு
நடிகர் ரஜினி நேற்று முன்தினம் ரசிகர்கள் சந்திப்பின் போது தனிக்கட்சி தொடங்கப்போவதாக மேடையிலேயே அறிவித்தார். இதனால் மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ரஜினி தனது ரசிகர்கள் சந்திப்பின் போது, அவர் நின்ற மேடையின் பின்புறம் ‘பாபா’ முத்திரை சின்னம் கொண்ட ‘லோகோ’ இடம் பெற்றிருந்தது. அதில், தாமரை மலர் மீது பாபா முத்திரை இடம் பெற்றிருப்பது போன்று அந்த சின்னம் அமைந்திருந்தது. இதனால், ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியின் சின்னமாக “பாபா முத்திரை” இருக்கும் என்று பேச்சுக்கள் எழுந்தது.
அதைபோல் ஆன்மிக அரசியலை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ள ரஜினிக்கு இந்த பாபா முத்திரை சின்னம் மிகவும் கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பலரும் பாபா முத்திரை சின்னத்தை விமர்சித்தனர்.
ஏனெனில், தாமரை மீது பாபா முத்திரை இருப்பது, ரஜினியின் அரசியல் பின்னணியில் பா.ஜ.க. இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், புதிய அரசியல் கட்சியை துவக்க போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ‘பாபா’ படத்தில் வருவது போன்ற கை முத்திரையை, ரசிகர் கூட்டத்தின் போதும், தனது இணையதளத்திலும் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால்,தனது இணையதளத்தில் பாபா முத்திரை விவகாரத்தில் அதிரடி மாற்றங்களை ரஜினி செய்துள்ளார். அதன்படி பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலர் நீக்கப்பட்டுள்ளது.பாபா முத்திரை வட்டத்தில் முன்பு கருப்பு கலர் இருந்தது. அதையும் அகற்றி விட்டு நீல நிற வண்ணத்தை சேர்த்துள்ளனர்.நேற்று இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.
தாமரை மலர் நீக்கப்பட்ட பாபா முத்திரை கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகம் புதிதாக இடம் பிடித்துள்ளது.மேலும்,பாபா முத்திரை வட்டத்தை சுற்றி ஒரு பாம்பு படம் வரையப்பட்டுள்ளது. பாபா முத்திரை வட்டத்துஉச்சியில் பாம்பு படம் எடுத்திருப்பது போன்று உள்ளது.