October 10, 2017 தண்டோரா குழு
சென்னையில் மின்சார ரயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணித்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புறநகர் பகுதியில் இருந்து, சென்னையில் உள்ள கல்லுாரிக்கு படிக்க வரும் மாணவர்கள், ரயில் தினம் கொண்டாடுவதாக கூறி, அவ்வபோது அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தரையில் தேய்த்தபடி சென்றனர்.
மேலும், ‘ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்’ என, பரபரப்பை ஏற்படுத்தி, ரயில் பயணியரை எரிச்சலடையச் செய்து உள்ளனர். இதை, தங்களுடன் படிக்கும் கல்லுாரி மாணவர்களுக்கு காட்டுவதற்காக, வீடியோ பதிவு செய்த அவர்கள், சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை பார்த்த, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள், கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள், யாரால் வெளியிடப்பட்டுள்ளது என, வலைதளங்களில் ஆராய்ந்ததில், பாரதிராஜா என்ற மாணவரின், ‘பேஸ்புக்’கில், 7ம் தேதி பதிவேற்றப்பட்டது தெரியவந்தது.மூன்று வீடியோக்களை பதிவேற்றியுள்ள அவர், ‘இது தான் நாங்க, இப்படித்தான் நாங்க’ என்ற தலைப்பில், பதிவு செய்திருந்தார்.
இது குறித்த போலீசார் விசாரித்து வந்த போலீசார், ஜெகதீசன்(18), தண்டபாணி(20), கிருஷ்ணன்(18), யுவராஜ்(18), ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்துள்ளனர்.