April 5, 2025
தண்டோரா குழு
பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வமும் திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களை சாதனையாளர்களாக மேம்படுத்தும் நோக்கில் கோவை கொடிசியா சாலை அருகே செயல்படும் பிரபல ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி,பேட்மிண்டன் ஜாம்பவான் கோபிசந்த் வழிகாட்டுதலில் நடைபெறும் ‘பேட்மிண்டன் குருகுல்’ எனும் பயிற்சி பள்ளியுடன் சுமார் 4-5 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒப்பந்தத்தால் தேசிய மற்றும் உலக அளவில் சிறப்பான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இதை பகிர நடந்த செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (5.4.25) ராக்ஸ் பள்ளிக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்த பள்ளியின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி,கோபிசந்த், ‘பேட்மிண்டன் குருகுல்’ பயிற்சி பள்ளியின் நிறுவனர் சுப்ரியா தேவ்கன் மற்றும் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதா கலந்து கொண்டனர்.
ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், சுமார் 4-5 ஆண்டுகளுக்கு முன்னர் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடமி மற்றும் பேட்மிண்டன் குருகுல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது எனவும், இதனால் இப்போது வரை 40 மாணவர்கள் விளையாட்டு வீரருக்கான (professional) பயிற்சியையும், 100 மாணவர்கள் துவக்கநிலை முதல் இடைநிலை அளவில் பயிற்சியையும் பெற்று வருகின்றனர் என கூறினார்.
“பேட்மிண்டன் குருகுல்-உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், 7 முதல் 8 மாணவர்கள் எங்கள் அகாடமியில் இருந்து ஜூனியர் மற்றும் சீனியர் நிலை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ளனர். 8 முதல் 9 வீரர்கள் தேசிய மற்றும் ஆசிய அளவிலான 17 மற்றும் 19 வயதுக்கு கீழானவர்களுக்கான போட்டிகளில் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர்,” என தெரிவித்தார்.
இந்த அகடெமியில் இரட்டையர் பிரிவுக்கான பயிற்சி பெற்ற தஞ்சையை சேர்ந்த ஹரி மற்றும் ரூபன் எனும் வீரர்கள் இங்குள்ள தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதா உடன் பயிற்சியை முடித்த பின்னர் கோப்பிசந்த் கீழ் ஹைதராபாத்தில் பயிற்சி பெற்று இப்போது உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தரவரிசைப்பட்டியலில் 45ம் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் இந்த அகாடமியில் பயிற்சி பெற்ற நர்தனா, அருண் முருகன் போன்றவர்கள் 2024-25க்கான தேசிய விளையாட்டுகளில் ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் விளையாட்டுப் போட்டிகளில் 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர்.
ராக்ஸ் அகாடெமியில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கோப்பிசந்த் கீழ் பயிற்சி எடுக்க வாய்ப்புகள் பெறுகின்றனர். இதுபோன்ற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால் சிறந்த விளைவுகளை பெற்றுவருவதால் அண்மையில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது என சுவேதா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கோப்பிசந்த் பேசுகையில், இந்த அகடெமியில் பயிற்சி எடுக்கும் பாட்மிண்டன் மாணவர்கள் வெளிப்படுத்தும் திறனையும், கோவையிலிருந்து வெளிவரும் திறமைசாலிகளையும் கண்டு தான் வியப்பதாக கூறினார். ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி தரப்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டமைப்பு, பயிற்சி மற்றும் ஊக்கத்தை அவர் பாராட்டினார்.
தொடர்ச்சியாக இத்தனை பேர் திறமைகளை வெளிப்படுத்தி வருவதற்கு இந்த அகடெமியும், அதன் பயிற்சியாளர்களும், குறிப்பாக தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதாவை அவர் பாராட்டினார். இங்குள்ள விளையாட்டு வீரர்கள் வரும் ஆண்டுகளில் மேலும் உயரத்தை எட்டுவார்கள் என அவர் கூறினார்.