September 8, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதாரமண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில் நுட்ப கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதாரமண்டல வளாகத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக, பொதுப்பணித்துறை மூலம் புதிய தகவல் தொழில் நுட்ப கட்டடம் 3.94 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டடம் இரண்டு அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் ஐந்து மேல் தளங்களுடன் மொத்தம் 8 தளங்களுடன் 27379 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றது.
இரண்டாவது அடித்தளம். 37369 சதுர அடியில் 77 கார் மற்றும் 60 இரு சக்கர வாகன நிறுத்துமிடமும், முதல் அடித்தளம் 37369 சதுர அடியில் 76 கார் மற்றும் 60 இரு சக்கர வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட்டு குறியீடு அமைக்கும் பணிகள் நடைபெற்று5 வருகிறது. தரைத்தளம் உணவு அருந்துமிடம் மற்றும் பொது நிர்வாக அலுவலகம், தகவல் தொழில் நுட்ப அலுவலகத்திற்கான இட வசதி கட்டமைப்பு பணிகள் நிறைவுற்று பால்ஸ் சீலிங், கண்ணாடி தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல்,இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் தளங்களில் தகவல். தொழில் நுட்ப அலுவலகத்திற்கான கட்டமைப்பு பணிகள் நிறைவுற்று. பால்ஸ் சீலிங்,கழிவறை கதவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும், இக்கட்டடத்தில் 6 எண்ணிக்கையிலான பயணிகள் மின்தூக்கிகள், 2 சேவை மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், தொலை தொடர்பு வசதிகள், கட்டட மேலாண்மை அலுவலக வசதிகள், இடிதாங்கி வசதிகள்,மழைநீர் சேகரிப்பு வசதிகள்,தானியங்கி பண பரிவர்த்தனை வசதி, ஜெனரேட்டர் அறை, பாதுகாப்பாளர் அறை, 6 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி,1,35,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி,130 KLD கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி, கழிவறைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
வெளிப்புறத்தில் 158 கார் மற்றும் 151 இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளது.கூடுதல் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் ஏ.டி.எம்.,அறை, முகவரியிடக்கூடிய தீ பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.