January 8, 2022 தண்டோரா குழு
ரேசன் கடைகள் தொடர்பான புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைத்து ரேசன் கடைகளிலும் மக்கள் பார்வைக்கு ஏற்றவாறு எழுதி வைக்க வேண்டும் என கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகு சென்னையிலுள்ள கூட்டுறவு சங்க பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளார்
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை உள்பட தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படும் அனைத்து ரேசன் கடைகளிலும் குறைகள் ஏதேனும் இருந்தால் மக்கள் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண் மற்றும் சம்பந்தபட்ட அலுவலக முகவரி ஆகியவை கடை முகப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தும் முறையாக பராமரிக்காமல் அழிந்து வருகிறது.
இதனால் ரேசன் கடை தொடர்பான புகார்களையும், குறைகளையும் குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க இயலாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக சம்பந்தபட்ட அலுவலக முகவரி மற்றும் தொலைப்பேசி எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவை ரேசன் கடைகளில் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.