May 13, 2017 தண்டோரா குழு
மனிதர்களால் உருவாகப்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ரோபோக்கள் நவீனமாகிக் கொண்டே வருகின்றது. இதனால் ரோபோக்களின் தேவையை நோக்கி உலகம் சென்று கொண்டிருகிறது என்றே சொல்லலாம்.
சங்கரின் எந்திரன் படத்தில் சிட்டி என்ற ரோபோட்டிற்கு உணர்ச்சிகள் இல்லை என்று முதலில் அதனை ராணுவத்தில் பணியாற்ற விடமாட்டார்கள். பின்னர் ரஜினி அதற்கு உணர்ச்சிகள் வரவழைபார்கள் இதனால் பெரும் விளைவுகளை அவர் சந்திப்பார். ரோபோக்களுக்கு மனிதர்களை போல் எப்படி உணர்ச்சிகள் இருக்க முடியும் என்று நாம் அப்போது நினைத்திருப்போம்.
ஆனால்,எதிர்காலத்தில் மனிதர்களைப் போன்றே உணர்வுகள் கொண்ட ரோபோக்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் வல்லுநர்கள் இறங்கியுள்ளனர். இதற்காக 3D பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பையோனிக் தோல் மூலம் மனிதர்களை போல், தொடுதலை உணரக் கூடிய திறனை ரோபோக்களுக்கும் புகுத்தும் புதிய ஆய்வில் வல்லுநர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
இந்நிலையில், மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், 3D அச்சிடப்பட்ட தொடுதிரை சென்சார்களை பயன்படுத்தி, 3D பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பியோனிக் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதன் மூலம் ரோபோக்களுக்கு தொடுதல் உணர்ச்சியை கொடுத்துள்ளனர்.
3D பிரின்டர் பயன்படுத்தி மின்னணு உணர்ச்சி கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் நான்கு அடுக்குகளை கொண்டது. முதல் அடுக்கில் சிலிக்கோளினால் ஆன அடுக்கு உள்ளது, அதன்மேல் இரண்டு அடுக்குகள் மின் முனைகளால் பொருத்தப்பட்டுள்ளது. அதில் சுருள் வடிவ அழுத்திகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மேல் அடுக்கு இறுதியில் உணர்கருவிகளின் வெளிப்புறத்தை விட்டு வெளியேறுகிறது. இதன் மூலம் ரோபோக்கள் உணர்ச்சியை பெறுகின்றன.
ரோபோக்களுக்கு உணர்ச்சிகளைக் கொடுப்பது ஆபத்து என்று எந்திரன் படத்தில் கூறியிருந்தாலும், வருங்காலத்தில் உணர்வுகளுடன் சுயமாக சிந்திக்கும் திறனையும் ரோபோக்கள் பெற்று மனிதனின் மறு உருவமாக ஜொலிக்கும் என்பதே ஆராய்ச்சிகளின் கருத்தாக உள்ளது.