September 18, 2017 தண்டோரா குழு
ரோஹிங்யா அகதிகள், நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில், பெரும்பான்மையாக உள்ள புத்த மதத்தினர் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதனால், ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.இந்தியாவில், 40 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இதையடுத்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில்,
ரோஹிங்யா அகதிகளில் சிலருக்கு பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளது எனவும் அவர்களை இந்தியாவில் தங்க அனுமதிப்பது தேசத்திற்கு மிக பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
மேலும், அவர்கள் சட்டவிரோதமாக அடையாள அட்டை பெற்று, விபசாரத்திற்காக பெண்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களை வெளியேற்றுவது என்பது கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவு. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது.அகதிகள் விவகாரத்தில் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.