May 19, 2017 தண்டோரா குழு
லண்டனிலுள்ள இந்திய உணவு விடுதியில் மனித இறைச்சி பரிமாறப்படுவதாக பேஸ்புக்கில் வெளிவந்த தவறான செய்தியால் அந்த விடுதி மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டனில் தென் கிழக்கு பகுதியில் “கரி ட்விஸ்ட்” என்னும் இந்திய உணவு விடுதியை ஷின்ரா பேகம் என்பவர் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் மனித இறைச்சி பரிமாறப்படுவதாக இணைய தளமான பேஸ்புக்கில் வெளிவந்த செய்தியால் தனது விடுதியை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுக்குறித்து அந்த விடுதியின் உரிமையாளர் ஷின்ரா பேகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“எங்கள் உணவு விடுதியில் மனித இறைச்சி பரிமாறப்படுவதாக வந்த செய்தியை பலர் உண்மை என்று நம்பிவிட்டனர். உங்கள் விடுதியை திறந்தால், அதை உடைத்து நொறுக்கி விடுவோம் என்று ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டினார். இதை அறிந்த மற்றொருவர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
இந்த செய்தியால் எங்கள் வணிகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தைரியமிருந்தால் எங்களுக்கு மனித இறைச்சி பரிமாறுவீர்கள்? என்று மக்கள் தொலைபேசி மூலம் திட்டுகிறார்கள். இந்த விடுதியை கடந்த 6௦ ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். யாரோ வெளியிட்ட இந்த தவறான செய்தியால் இதை மூட வேண்டிய நிலை.
இந்த செய்தி வெளியானது முதல், வாடிக்கையாளர்கள் வரவு குறைந்து விட்டது. ஊழியர்களும் தங்களுடைய பணியின் நேரத்தை குறைது கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.