October 20, 2017 தண்டோரா குழு
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணை எதுவும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் பல்வேறு உதவித் திட்டங்களின் கீழ் நிதி உதவிகளைப் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திட்டங்களுக்கான நிதியானது வங்கிகள் மூலமாக வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குடன், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றன. அத்துடன் டிசம்பர் 31-க்குள் அவ்வாறு இணைக்காவிட்டால், வங்கிக் கணக்குகள் செயலிழக்கச் செய்யபப்டும் என்றும் எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தில்லியை அடிப்படையாக கொண்டு செயல்படும் ‘மணிலைஃப்.இன்’ எனும் செய்தி இணையதளத்தின் சார்பாக யோகேஷ் சப்கலே என்பவர் ரிசர்வ் வங்கியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அப்போது அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, பண மோசடியைத் தடுக்கும் பொருட்டு, வங்கிகள் உரிய ஆவணங்களை பராமரிக்கும் பொருட்டு, மத்திய அரசு ஜூன் 1,2017 அன்று GSR 538(E) என்ற எண் கொண்ட அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் வங்கிகளில் புதிய கணக்கு துவக்க விரும்புபவர்கள் மற்றும் தற்பொழுது கணக்கு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை எண்) இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையானது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டதே ஒழிய, ரிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இவ்வாறு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.