March 14, 2023 தண்டோரா குழு
கோவை இடையர் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு நின்று கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்களை சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோவை வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கூறியதாவது:
கோவை இடையர் வீதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் 4 பேரை தாக்கினர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்திய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளோம். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இந்து முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. செல்போனில் அதற்கான ஒரு சில ஆவணங்கள் உள்ளது. கோவையில் வசிக்கும் வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே வட மாநில தொழிலாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் போலீசாருடன் தொடர்பில் உள்ளனர்.
வடமாநில தொழிலாளர்களுக்கு உதவ போலீஸ் ஹெல்ப்லைன் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள போலீசாரின் தொடர்பு எண்கள் அச்சிடப்பட்ட கார்டு வட மாநில தொழிலாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தற்போது கட்டுப்பாட்டு அறையில் ஹிந்தி தெரிந்த போலீசாரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கோவை வடக்கு துணை கமிஷனர் சந்தீஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.