December 24, 2016
வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்ப யுகத்தில் ஸ்மார்ட் போன் நமது கைகளின் ஆறாவது விரலாக மாறிவிட்டது. நமது ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போனுடன் விடிந்து, ஸ்மார்ட் போனை பார்த்தபடியே முடிகிறது என்பதே உண்மை. ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்ததுடன் வாட்ஸ் அப், யுடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற செய்தி மற்றும் வீடியோ பரிமாறிக்கொள்ளும் போக்கும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வாட்ஸ்அப் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 500 மடங்கு அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் குழுக்கள் செய்திகள், வீடியோ பகிர்ந்து கொள்ள ஏற்ற தளமாக இருப்பதால் ஒவ்வொரு செல்போன் உபயோகிப்பாளரும் குறைந்தபட்சம் 10 வாட்ஸ்அப் குழுக்களிலாவது உறுப்பினராக உள்ளனர். குடும்ப உறுப்பினர் குழு, நெருங்கிய உறவினர் குழு, பள்ளி நண்பர்கள் குழு, அலுவலக நண்பர்கள் குழு, அலுவலக அதிகாரிகள் குழு, செய்திக் குழு, அரசியல் குழு என எண்ணற்ற வகைகளில் குழு உறுப்பினராக உள்ளனர்.
எனவே இதில் ஏதேனும் ஒரு குழுவில் அவர்கள் பெரும் செய்தியை அதனை படித்து முடிப்பதற்கு முன்னரே தாங்கள் உறுப்பினராக உள்ள அனைத்து குழுக்களிலும் ” Copy and Paste ” செய்யும் போக்கு தம்மையறியாமலே செய்யத் துவங்கி விடுகின்றனர்.
வாட்ஸ்அப் செய்திகள் பல உபயோகமான செய்திகளை நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. என்றாலும் பல சமயங்களில் இதில் பரப்பப்படும் செய்திகள் சற்றும் அடிப்படை உண்மை இல்லாதவையாகவும், நம்மை குழப்பத்திற்குள்ளாகி பீதியடைய செய்வதாகவும் உள்ளது. அவற்றுள் சில
* நாசா அறிவிப்பு –72 மணி நேரம் மழை பெய்யும் – சென்னை மூழ்கும் – தப்பித்தது செல்லுங்கள்
* இந்த செய்தியை ஷேர் செய்தால் எனக்கு 5 பைசா வீதம் பணம் கிடைக்கும். ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்
*முதலைப் பண்ணையிலிருந்து முதலைகள் தப்பித்தன – தரையில் கால்வைக்க வேண்டாம்.
*பள்ளிக் குழந்தைகள் வேன்விபத்து – ரத்தம்தேவை.
*இந்திய ரூபாயின் மதிப்பு = டாலரின்மதிப்பு.
*இந்தியானக இருந்தால் ஷேர் செய்யுங்கள்
*எலுமிச்சைப் பழத்தை இரண்டாக அரிந்து கிராம்பு சொருகி வைத்தால் கொசுகடிக்காது.
மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு செய்திகளை பரப்பிபடிக்கும் அனைவரையும் முட்டாளாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறான வெற்று செய்திகளால் உங்களின் செல்போன்டேட்டா வீணாகும். குட்மார்னிங் இமேஜ் நீங்கள் 150 பேர் கொண்ட குழுவில் பகிர்ந்தால் அதனை அனைவரும் பார்க்கும் போது அது ஒரு எம்.பி டேட்டாவை செலவாக்கும் என்றால் நீங்கள் பகிரும் வீடியோக்களை பற்றி யோசித்து பார்க்கவும்.
செல்போன் நிறுவனங்கள் மாதக்கணக்கில் இலவசமாக டேட்டா தருவதாக நீங்கள் கூறலாம். மொபைல் டேட்டா இலவசமாக இருக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள் செலவிடும் நேரம் என்பது விலைமதிக்கத்தக்க உங்கள் நேரம் என்பதை உணர வேண்டும்.
சட்டம் சொல்வது என்ன?
வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அதனை நடத்தி வரும் அட்மின் பொறுப்பாவார் என சமீபத்திய பல உயர்நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. தவறான ஒரு செய்தியை பதிவிடுவதன் மூலமும் அதனை பார்வேடு செய்வதும் ” THE INFORMATION TECHNOLOGY ACT 2000 த்தின்படி குற்றமாகும். இச்சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்.
நவீன தொழில்நுட்ப சாதனைகள் நமது வேலைகளை எளிமைப்படுத்தவும்,செய்திகளை விரைவாக பெறுவதை உறுதி செய்யவும் கண்டுபிடிக்கப்பட்டவை. அவற்றை முறையாகவும் திறமையாகவும் பயன்படுத்துவது நமது கையிலேயே உள்ளது.
” எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு”