March 25, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், வனச்சரகத்திற்குட்பட்ட தடாகம் காப்புக் காட்டிற்கு வெளியே வெளியே, சுமார் 1 கி.மீ. தொலைவில்,பூச்சியூர் குறுவம்மா கோவில் பகுதி உள்ளது. இதற்கு அருகில் உள்ள பட்டா நிலத்தில், உள்ள மின் வாரிய மின் கம்பி விநியோக சிமெண்ட் போஸ்ட் மீது ஒரு நடுத்தர வயது ஆண் யானை இன்று அதிகாலை உரசியதை அடுத்து மின்சார சிமெண்ட் கம்பம் உடைந்து, மின் கம்பம் மற்றும் கம்பி யானை மீது விழுந்ததில்,அந்த ஆண் யானை, சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விட்டது.
உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இறந்த இடம் வனப்பகுதிக்கு வெளியே சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் ஆகும். உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் வனக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகாலையில் யானை ஊருக்குள் புகுந்தது. அப்போது வனத்துறையினர் யானையை மீண்டும் வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் எதிர்பாரதவிதமாக யானை மின் கம்பத்தில் மோதி உயிர் இழந்தது,” என்றனர்.