June 24, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் மழைக்காலம் துவங்குவதற்கு முன் குளங்களில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். கடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டம் முழுக்க மண் எடுக்க வேண்டிய இடங்கள் குறித்து பட்டியல் கொடுத்தும் மண் எடுக்க அனுமதி வழங்கியதாக தெரியவில்லை.மேலும் விதிமுறைகளுக்கு மாறாக யாரும் விலைபேசி வண்டல் மண் எடுக்கக்கூடாது.விவசாயிகள் எடுக்க ஏராளமான விதி முறைகள் பின்பற்றப்படுகிறது. முழுக்க முழுக்க விவசாயிகள் மட்டுமே பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் ஆதாரங்கள் தூர்வார வேண்டும்.
கோவை மாவட்டத்தில் பயன்படுத்த முடியாத அனுமதி இல்லாத கல் குவாரிகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டம் துவங்க முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.கனிமவளத்துறை நிர்வாகம் கோவை மாவட்டத்தில் உள்ள பயன்படுத்தாத கல்குவாரிகள், தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்து மழைக்காலங்களில் உருவாகும் மழைநீர் சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
வனவிலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் ஊடுருவி வருவதை தடுக்க வனப்பகுதிகளை கூடுதலாக விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதை தவிர்க்க வனப்பகுதியில் அரசு மூலம் வன பயிர் சாகுபடியை கூடுதலாகவும், குடிநீர் ஆதாரமாக வனத்தை ஒட்டி நீர்த்தேக்கத் தொட்டிகள் அதிகமாக உருவாக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப் பரப்பில் உள்ள தனியார் கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.