February 25, 2017 அனீஸ்
நீலகிரி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாகக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் வன விலங்குகள் இறந்து போவது வனத்துறையினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி 55 சதவீதம் வனங்களால் சூழ்ந்த மாவட்டமாகும். இங்கு உள்ள வனப் பகுதிகளில் யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும், இந்த வனப் பகுதிகளில் பல அரிய வகை மரங்கள், தாவரங்கள், பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த வருடம் பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்துவிட்டதால், காரணமாக முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முதுமலை சுற்று வட்டாரப் பகுதிகளான மாயார், மசினகுடி, சிங்கார பகுதிகளில் கால்நடைகள் இறந்துவிடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் மசினகுடி சுற்று வட்டாரப் பகுதிகளில் 400 – க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்ததாக கூறப்படுகிறது.
மசினகுடி வனப்பகுதியில் வறட்சி காரணமாக 5 மாத குட்டி யானை இறந்துவிட்டது. தெப்பக்காடு வனப்பகுதியில் 40 வயது பெண் யானை இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று யானைகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்தனர். கடும் வறட்சியே யானைகள் சாவுக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
நெலாக்கோட்டை வனப்பகுதியில் இறந்து பல நாட்களாகி அழுகிக் கிடந்த யானையின் உடலை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த யானையின் சாவுக்குக் காரணம் என்ன? எப்போது அந்த யானை இறந்தது? என வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஒரு பெண் யானை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.
மசினகுடி வனப்பகுதியில் பிறந்து 5 மாதங்களே ஆன ஓர் ஆண் குட்டி யானையும் நெலாகோட்டை வனப்பகுதியில் இறந்து சில மாதங்களே ஆன ஒரு யானையின் எலும்பு கூடும் கண்டறியபட்டுள்ளதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் கோவை மண்டல கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், வறட்சி மற்றும் வயது காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.