May 31, 2022 தண்டோரா குழு
75வது சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ‘‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’’ (AKAM) எனப்படும் ஒரு செயல்பாட்டை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை நடத்துகிறது.
இது சம்பந்தமாக ‘ப்ரயாஸ்’ (PRAYAAS) செயல்முறை கோவை மண்டல அலுவலகம் சார்பாக ரயில் நிலையம் எதிரில் உள்ள கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் வைபவ்சிங் , உதவி வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ஆல்பர்ட் ராஜ், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜெயசங்கர் முன்னிலையில் நடந்தது. இதில் இ.பி.எப். பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த செயல்முறையானது பயனாளிகளுக்கு ஓய்வூதிய தொகையை ஓய்வூதிய நாளில் வெளியிடுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முயற்சிக்கு உறுப்பினர்கள் ஓய்வூதிய ஆவணங்களை முன்கூட்டியே பூர்த்தி செய்து சமர்ப்பித்து ஓய்வு பெறும் அதே நாளில் ஓய்வுதியம் பெறுவதற்கான உத்தரவு ஆணையை பெறலாம்.
கடந்த மே மாதத்தில் கோவை மண்டல அலுவலகத்தில் பென்ஷன் மனு தாக்கல் செய்த 24 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் செலுத்தும் ஆணைகள் தயாரிக்கப்பட்டு இந்த நிகழ்வின் போது சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டன.