December 12, 2016 தண்டோரா குழு
வர்தா புயல் காரணமாக சென்னையில் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டு 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள வர்தா புயல், சென்னையில் திங்கட்கிழமை கரையை கடக்கிறது. இந்த புயலால் பலத்த காற்றுடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யதுக் கொண்டிருக்கிறது.
சென்னை விமான நிலையம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன.
காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகின்றன. அந்தமான், தில்லி, திருவனந்தபுரம், புனே, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு, மும்பை நகரங்களுக்கான உள்நாட்டு விமான சேவையும், சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, ரியாத் ஆகிய பகுதிகளுக்கான விமான சேவையும் பாதிக்கப்பட்டு 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 விமானங்கள் திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அதே போல் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் ரயில் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கட்கிழமை அறிவித்துள்ளது.