December 24, 2016 தண்டோரா குழு
வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக மத்திய அரசின் குழு வரும் 27 ம் தேதி தமிழகத்துக்கு வருகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வர்தா புயல் டிசம்பர் 12ம் தேதி தமிழகத்தை தாக்கியது. இதில் சென்னை, திரூவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் மரங்கள், பல ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அதிகமான சேத மதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சமீபத்தில் பிரதமர் மோடியை தில்லி சென்று சந்தித்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய நிவாரண தொகையாக ரூ.22 ஆயிரத்து 573 கோடி தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற பிரதமர், மத்திய குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் பர்வீன் வசிஷ்டா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் 27 ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.