December 13, 2016 தண்டோரா குழு
வர்தா புயல் மற்றும் கனமழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான வர்தா புயல் திங்கட்கிழமை சென்னையை கரையை கடந்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறாவளி காற்று வீசியது. மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புயல் மற்றும் வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சென்னை-4, காஞ்சிபுரம்-2, திருவள்ளூர்-2, விழுப்புரம் மற்றும் நாகையில் தலா ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு மையம் அறிவித்துள்ளது. இதுவரை 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.இதனிடையே வர்தா புயல் பாதிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.