March 19, 2022 தண்டோரா குழு
கோவையில் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தை பார்த்து சொகுசாக வாழ விரும்பிய 17 வயது சிறுவன் உட்பட இருவர், இருசக்கர வாகன திருடர்களாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளாக பந்தய சாலை, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்தது. இதன் ஒருபகுதியாக கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் கடந்த 10ஆம் தேதி தனது இரு சக்கர வாகனம் மாயமானதாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் “தனது இருசக்கர வாகனம் விற்பனைக்கு வந்துள்ளதைப் பார்த்த நபர் இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்”.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இரு சக்கர வாகனத்தை திருடி இணையத்தில் விற்பனை செய்தது, இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மாநகர் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிரபல நடிகரின் திரைப் படத்தை பார்த்துள்ளனர். அந்தப் படத்தால் ஈர்க்கபட்ட இருவரும் இரு சக்கர வாகனங்களை திருடி சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டனர். மேலும் யூ ட்யூப் வீடியோக்கள் மூலம் கற்றுக்கொண்டு நேர்த்தியாக 11 இருசக்கர வாகனங்களை நேர்த்தியாக திருடியுள்ளனர்.
மேலும் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்க ஓஎல்எக்ஸ் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்த நிலையில், இதில் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் ஒருவர் தனது திருடப்பட்ட வாகனம் விற்பனைக்கு வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து 17 வயது சிறுவன் மற்றும் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இருவரிடமிருந்தும், திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்களையும் மீட்டனர். அதில் ஏழு வாகனங்களின் உரிமையாளர்களை கண்டறிந்துள்ள போலீசார் மீதமுள்ள 4 வாகனங்களின் உரிமையாளர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 17 வயது சிறுவன் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அதில் 17 வயது சிறுவனை அறிவுறுத்தி ஜாமீனில் விடுவித்த நீதிபதி, முருகானந்தத்தை பல்லடம் கிளைச் சிறைக்கு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கோவையில் அண்மையில் வெளிவந்த பிரபல நடிகரின் திரைப்படத்தை பார்த்து சொகுசாக வாழ நினைத்த 17 வயது சிறுவன் உட்பட இருவர் இரு சக்கர வாகன திருடர்களாக உள்ள மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது