March 14, 2016 வெங்கி சதீஷ்
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் சார்புடையவர்களின் சிலைகளை அந்தந்த கட்சியினர் மறைக்க வேண்டும் எனவும் அல்லது தேர்தல் அதிகாரிகள் அதை மறைத்துவிட்டு அதற்குண்டான செலவை சம்பந்தப்பட்ட கட்சியினரின் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வள்ளுவர் சிலை இன்று காலை திடீரென சாக்குப்பையால் மூடப்பட்டிருந்தது. இதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சேலம் மாவட்ட பா.ஜ.க விவசாயிகள் அணி மாவட்ட தலைவர் சம்பத் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்போது அவர்கள் அரசியல் தலைவர்கள் சிலையை மூடுவது தானே முறை அதைத்தான் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
மிகவும் மனம் நொந்த அவர் உடனடியாக ஒரு மனுவைத் தயார்செய்து அதில் மாலைக்குள் சாக்கை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவசர அவசரமாகச் செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் மாலைக்குள் சாக்கை அகற்றினர். இதைப் பார்த்த மக்கள் அரசியல்வாதிக்கும் திருவள்ளுவருக்குமே வித்தியாசம் தெரியாத அதிகாரிகள் எப்படித் தேர்தலை நியாமாக நடத்துவார்கள், எப்படி நாளை நமது தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என மனம் நொந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.