April 25, 2017 தண்டோரா குழு
பெங்களூரில் உள்ள அனைத்து உணவு விடுதிகள், திரையரங்குகள், மற்றும் வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என்று பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2௦16-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி பெங்களூரில் வசிக்கும் சுதா கட்வா(47) என்பவர் தன்னுடைய உறவினருடன் பிரபல கே.எப்.சி உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த உணவகம் குடிநீரை தரமறுத்து மினரல் பாட்டில் தண்ணீரை விலைகொடுத்து வாங்கிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அவர் தலைமை சுகாதார அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்பு அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பெங்களூர் நகர்புற நுகர்வோர் இடர் குறைப்பு மன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கே.எப்.சி. நிறுவனம் அவருக்கு 5௦௦௦ ரூபாயை தரவேண்டும் என்றும், அதேபோல் பெங்களூரில் உள்ள அனைத்து உணவு விடுதிகள், திரையரங்குகள், மற்றும் வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.