March 16, 2017 தண்டோரா குழு
வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல் கணக்குகளை அவற்றைப் பாதுகாப்பதற்கான குறியாக்கத்தின் (Encryption) மூலம் உடைத்து, களவாடி, திரிக்கும் ஆபத்துக்குவழி வகுக்கும் குறைபாட்டை செக் பாயிண்ட் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற கணினி பாதுகாப்பு நிறுவனம் கண்டுபிடித்து எச்சரித்துள்ளது.
வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூன்றாவது நபருக்குத் தெரியாமல் தகவல்களை ஒருவருக்கு ஒருவர் மட்டும் பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி கொண்டவை. இவ்வாறு தனிப்பட்ட நேரடியான தகவல் பரிமாற்றத்தை மூன்றாவது நபர் அறிந்துகொள்ளாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு கணினி சாஃப்ட்வேரில் செய்யப்பட்டுள்ளது. அதற்கு குறியாக்கம் எனப்படும் வழிமுறை கையாளப்படுகிறது.
ஆனால், அதே குறியாக்க வழிமுறையின் மூலம் ஒருவரது வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் தகவலில் வெளியார் ஊடுருவி, அத்தகவலைப் பின்தொடர்ந்து சம்பந்தப்பட்டவரின் தகவல் கணக்குகளைக் களவாடவும், அவரது தகவல் கணக்குகளைச் சிதைக்கவும் முடியும் என்று செக் பாயிண்ட் கடந்த வாரம் எச்சரித்துள்ளது. “அதற்கு வழி செய்யும் பிழை ஒன்று அந்த சாஃப்ட்வேரில் உள்ளது” என்று அந்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
“எளிதில் பாதிக்கப்படக் கூடிய அந்த பிழை மற்றவர்களுக்குத் தெரிவதற்கு முன்பே சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், பிழை சரிசெய்யப்படுவதற்காகக் காத்திருக்கிறோம். இது பல லட்சம் பேரின் தகவல் கணக்குகளில் சேதம் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது” என்று செக்பாயிண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுத் தலைவர் ஓடேட் வனுனு ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
“ஒரு சாதாரண படத்தை அனுப்பி, ஒருவரது தகவல் கணக்குகளைக் கையாள முடியும். அத்துடன், அவரது தகவல் பரிமாற்ற வரலாற்றையே அறிந்து கொள்ள முடியும். அதையடுத்து, குறிப்பிட்ட நபரின் பெயரில் அனுப்புவது போல போலியான வேண்டத் தகாத புகைப்படத்தை அனுப்ப முடியும்.
அந்தப் படத்தைக் கணக்கு வைத்திருப்போரின் தொடர்பில் உள்ள யாராவது ஒருவர் கிளிக் செய்தால், உடனே அவரது கணக்குக்குள் ஊடுருவ முடியும். இதற்காகப் பயன்படுத்தப்படும் குறியீடு (Code) மூலமாக சங்கிலியைப் போல் பரவி ஏராளமானோரின் தகவல் கணக்கு, தனிப்பட்ட தகவல்கள் படங்கள் என அனைத்தையும் களவாட இயலும்” என்றார் அவர்.
இதற்குச் சரியான தீர்வு, களவாடும் “வைரஸை”க் கண்டறிந்து, உடனே தடுப்பதற்கான நுட்பத்தை வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய இரு சமூக வலைதளங்களும் கையாள வேண்டும்.
வாட்ஸ் அப் தளத்தை 100 கோடிப் பேரும், டெலிகிராம் தளத்தை 10 கோடிப் பேரும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த தளங்களில் பரிமாறப்படும் தகவல்கள் நேருக்கு நேராக மட்டுமே அமைந்திருப்பதால், தீவிரவாதிகளால்தங்களது ரகசிய தகவல்களைத் தங்களுக்குள் மட்டுமே பரிமாறிக் கொள்ள உதவுகிறது.