November 25, 2016 தண்டோரா குழு
நம்ம கோவை வாட்ஸ் ஆப்பில் வந்த கோரிக்கையை ஏற்று வேகதடைக்கு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வண்ணம் பூசினர்.
கோவை மாவட்டத்தின் நலம்விரும்பிகள் ஒன்றாக சேர்ந்து “நம்ம கோவை” என்ற வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளனர்.இதில் நேற்று(24.11.2016) காலை 10 மணியளவில் சதீஷ் என்பவர் கோவை மாநகர் சுங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையானது சட்டென்று அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதாகவும்,இதனால் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் படத்துடன் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சரணவன் சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழைத்து தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு வேகத்தடைக்கு காவலர்களைக் கொண்டு வர்ணம் பூசப்பட்டு மாலை 6 மணிக்கு அழைத்து ஒளிரும் பிரதிபலிப்பான் (Cats Eye) பொருத்தப்பட்டது.
இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சரணவன் கூறுகையில்,
கோவை மாநகரத்தில் எப்படியாவது விபத்துகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்று எண்ணும் உதவி கமிஷனர் மகுடபதி, ஆய்வாளர் அய்யர்சாமி, சதாசிவம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கிடைக்க பெற்றது எனது அதிரஷ்டமே. கோவை சாலை போக்குவரத்தை பொறுத்தவரை மக்களுக்கு தேவையான வசதிகளை நாமே செய்து விட வேண்டும், அவர்கள் சுட்டிக்காட்டினால் அதனை உடனடியாக செய்து விட வேண்டும் என்ற கோவை காவல் ஆணையரின் எண்ணமே இதற்கு காரணம் என்றால் மிகையல்ல என கூறினார்.
மேலும், கோவை மாநகர பொதுமக்கள் சாலை போக்குவரத்து தொடர்பான தங்கள் ஆலோசனைகளை காவல்துறை கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் எண் 8190000100 மூலம் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறினார்.