December 9, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 66 சதவீதம் குறைவாக தான் பெய்துள்ளது எனவும் வார்தா புயல் வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
விசாகப்பட்டினம் அருகே நிலைகொண்டுள்ள வார்தா புயல் வலுவிழக்க வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான வார்தா புயல் வெள்ளிக்கிழமை காலை விசாகப்பட்டினத்தில் தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
மணிக்கு 2 கி.மீ. மெதுவாக வார்தா புயல் நகர்ந்துள்ளது. வடமேற்கு திசையில் செல்வதால் வரும் 12-ம் தேதி நெல்லூர் காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மெதுவாக நகர்வதால் கரையைக் கடக்கும் முன் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
ஆந்திர கடற்பகுதிகளில் புயல் காரணமாக அலையின் வேகம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் யாரும் ஆந்திர கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை இயல்பாக 370 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 129.4 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 66 சதவீதம் குறைவு.இவ்வாறு வானிலை ஆய்வக இயக்குநர் கூறினார்.