June 26, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் தற்போது மிதிவண்டி பாதை, பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடம், கற்றல் மையம், அனுபவ மையம்,மியாவாக்கி அடர் வனக்காடுகள் அமைத்தல், சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை நிலையம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக கூடுதல் கமிஷனர் ஆர்.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்திட அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆடிஸ் வீதியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நவீன நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற ஏதுவாக பயிற்சி மையத்துடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்மையத்தில் 80 நபர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக நூலக அறை, அலுவலக அறை, கழிப்பிடங்கள், 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க ஏதுவாக அலமாரிகள், 42 நபர்களுக்கு பயிற்சி கொடுக்க ஏதுவாக பயிற்சி அறை, வாகன நிறுத்துமிடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்காக செயல்திறன் அறை, செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இதழ்கள் வாசிப்பு அறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இப்பணிகளை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாக கூடுதல் கமிஷனர் அறிவுறுத்தினார்.
பின்னர் செல்வபுரம் குறிஞ்சி கார்டன் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் 1.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அதன் தரத்தினை பரிசோதனை செய்தார். மாநகராட்சி பகுதிகளில் தற்போது நடைபெற்றுவரும் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், மாநகராட்சி துணை கமிஷனர் சிவகுமார், மாநகரப் பொறியாளர் சுகந்தி, நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.