May 12, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயில் வாட்டி வாதைத்து வந்தது. ஏப்ரல் மாதத்தில் கோடை வெயில் 100 டிகிரி பாரன் ஹிட் வரை கூட வெப்ப நிலை பதிவானது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கோவை மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது.
மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கோடை காலத்திற்கு ஏற்றவாறு பயிரிடப்பட்ட வாழை, மக்காச்சோளம் போன்றவைகள் பெரும் சேதம் அடைந்து வருகின்றன.அதே போல் தென்னை,பாக்கு மரங்களிலும் சேதங்கள் அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளன. இந்த இடங்களில் வாழைக்கு அடுத்தப்படியாக தென்னை மற்றும் பாக்கு மரங்களும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். கோடை காலம் என்பதால் கரும்பு, நெல் போன்றவைகள் பெரும்பாலான இடங்களில் பயிரடப்படவில்லை. கோவை மாவட்டத்தில் கோடை மழை மிகவும் அதிகமாக பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது.
சூறாவளிக்காற்றுடன் பெய்யும் மழை காரணமாக வாழைகள் பெருமளவு சேதம் அடைகின்றன. தென்னை மற்றும் பாக்கு மரங்களும் பல்வேறு இடங்களில் சாய்ந்துள்ளன. மழை காலங்களில் வாழை சேதத்திற்கு அதிகாரிகள் வந்து பார்த்து பின்னர் நஷ்ட ஈடு தருவது என்பது மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வாழைக்கு சுமார் ரூ.250 முதல் ரூ.300 விவசாயி செலவு செய்ய வேண்டியுள்ளது. கோடை மழையால் வாழையின் சேதம் என்பது ஒரு தோட்டத்தில் 3000 வாழைகள் இருந்தால் அதில் 2500 வாழைகள் சாய்ந்துள்ளன. விவசாயிகளுக்கு கண்டிப்பாக நஷ்ட ஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்த சேதங்களை பேரிடர் கால சேதமாக அறிவிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் நேந்திரம், ரஸ்தாளி, கத்தளி போன்ற வாழை வகைகள் மிகவும் அதிகமாக பயிரிடப்படும். இவைகள் மும்பை மற்றும் கேரளாவுக்கு அதிகமாக செல்லும். மும்பை வெட்டு என்று அழைக்கும் அளவுக்கு கோவை வாழைகள் பிரபலமிக்கவை. தற்போது ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக வாழை இலைகள், வாழைப்பழங்கள் போன்றவைகள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ஹோட்டல்கள் உள்ளன. இந்த கடைகளில் சாப்பாடு, டிபன் போன்றவற்றிக்கு வாழை இலைகளில் உணவு பரிமாறப்படுவதே அதிகம். மழையால் வாழை மரங்கள் சாய்ந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வாழை இலைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய அளவிலான ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் வாழை இலைகளை அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மணி கூறியிருப்பதாவது:
மழையால் விவசாயிகள் மட்டுமல்லாது சாலையோர வியாபாரிகளும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மாலை நேர வியாபாரம் தான் சாலையோர வியாபாரிகளுக்கு முக்கியமானது. மழையால் வியாபாரம் பெரும் அளவு பாதித்துள்ளது. வாழைகள் சேதம் காரணமாக பெரும்பாலான இடங்களில் வாழை இலைகள் கிடைப்பது இல்லை. தள்ளு வண்டி கடைகளில் உணவுகளை பரிமாற வாழை இலைகள் கிடைக்காமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ரூ.3க்கும் விற்பனை செய்யப்பட்ட டிபன் வாழை இலைகள் தற்போது ரூ. 7 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பாக்கு தட்டு விலை என்பது அதிகம். ஆனால் வேறு வழியில்லாமல் அதில் வைத்து உணவு பரிமாறப்படுகின்றன. சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி இதற்கு மாற்றுவழியை அரசு உருவாக்கி தர வேண்டும். வாழை இலை விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.