February 27, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் ஆலந்துறை சப்பாணி மலை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). விவசாயி. இவர் சப்பாணி மலை பகுதியில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வாழைப்பூவுடன் வந்திருந்தார். கண்களில் கண்ணீருடன் வாழ வழியில்லை என அலுவலகம் முன்பு நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
” ஆலந்துறை சப்பாணி மலை பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். வாழை விவசாயம் பிரதானமாக செய்து வருகிறேன். சப்பாணி மலை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் பிரதானமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தினமும் அதிகாலை வேலையில் விடிய விடிய காட்டு யானைகள் வருகின்றன.
வாழை தோப்புகளில் கும்மாளம் அடிக்கின்றன. வாழைகளை சாப்பிட்டுவிட்டு சேதம் செய்துவிட்டு செல்கின்றன. விவசாயிகள் தினமும் ரூ.500, 1000 செலவு செய்து பட்டாசுகள் வெடிக்கிறோம். வனத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் வந்து பார்த்து நஷ்ட ஈடு தந்தாலும் அது போதுமானதாக இல்லை. ரூ.6 லட்சம் செலவு செய்து வாழை விவசாயம் மேற்கொண்டதில் தேசமடைந்த வாழைகளுக்கு ரூ.83 ஆயிரம் தான் நஷ்ட ஈடு கிடைக்கின்றன. யானைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை. வாழ்வதா? சாவதா? தெரியவில்லை. இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.