• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜயகாந்துக்கு எதிராகத் களமிறங்கும் தேர்தல் மன்னன் பத்மராஜன்.

April 22, 2016 வெங்கி சதீஷ்

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பெயர்வாங்க முயற்சி செய்வார்கள். அதில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வித்தியாசமானவர்.

மேட்டூரைச் சேர்ந்த இவர் குஞ்சாண்டியூர் அருகே டயர் பஞ்சர் ஓட்டும் தொழில் செய்து வந்தார். முதன் முதலாக 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட பலருடன் இவரும் போட்டியிட்டார். இதற்காக 1988ம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில் கம்யுனிஸ்ட் வேட்பாளர் வெற்றிபெற்றார். அப்போது சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைவரும் இவரைக் கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். இதையடுத்து ஒரு வைராக்கியத்துடன் அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிடத் துவங்கினார்.

இது வரை 172 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ள இவர் இன்று மேட்டூர் தொகுதியில் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியான மேகநாத ரெட்டியிடம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு 173வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் நம்மிடம் பேசிய அவர், ஆரம்ப கட்டத்தில் என்னைக் கிண்டல் செய்த அனைவராலும் தான் எனக்குத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தோன்றியது. பின்னர் இதையே ஏன் ஒரு சாதனையாக செய்யக்கூடாது என நினைத்து அடுத்தடுத்து போட்டியிட்டேன்.

மேலும் இதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் யாராவது ஒரு வி.ஐ.பியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என நினைத்தேன். 1991ம் ஆண்டு முதன் முதலில் நரசிம்மராவ் அவர்கள் போட்டியிட்ட இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தேன்.

இதையடுத்து போட்டியின்றி தேர்ந்தெடுக்க நினைத்து அவர்கள் என்னைக் கடத்தினர். பின்னர் பா.ஜ.கவினர் வேட்புமனு தாக்கல் செய்ததால் நான் பிழைத்து வந்தேன் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இதுவரை நான்குமுறை ஜனாதிபதி பதவிக்கும், நான்கு முறை துணை ஜனாதிபதவிக்கும் போட்டியிட்டுள்ளேன். மேலும் மன்மோகன்சிங், நரசிம்மராவ், வாஜ்பாயி, மோடி ஆகிய நான்கு பிரதமர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன்.

13 மத்திய அமைச்சர்கள், 15 மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் 11 முதல்வர்களை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார். இதன்மூலம் 2004ம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளேன். அதில் அதிக முறை போட்டியிட்ட வேட்பாளர் எனப் பட்டம் கொடுத்தனர். அப்போது வெறும் 57முறை மட்டுமே போட்டியிட்டிருந்தேன். மேலும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் 2004, 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் அதிகப்படியாகத் தோல்வியடைந்த வேட்பாளர் எனத் தேர்வு செய்யப்பட்டேன்.

நான் போட்டியிட்டதிலேயே 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 5 மாநிலங்களில் 8 தொகுதிகளில் போட்டியிட்டேன். அதையடுத்துதான், போட்டியிடும் தொகுதிகள் குறித்த வரையறை குறித்து பேசப்பட்டது.

இது போல பல்வேறு சட்ட திருத்தங்களுக்கு நான் காரணமாக இருந்துள்ளேன் எனத் தெரிவித்தார். இதோடு இவர் சிறந்த ஐயப்ப பக்தரும் கூட என்பது கூடுதல் தகவல். சுமார் 36 ஆண்டுகளாக ஐயப்ப சேவா சங்கம் மூலம் சேவை செய்து வருவதால் தங்க அங்கியைச் சுமந்து செல்லும் 9 பேர் கொண்ட குழுவில் இவருக்கும் இடம் வழங்கி அந்தச் சங்கம் இவரைக் கவுரவித்துள்ளது.

இதை எல்லாம் அடுத்து வரும் 25ம் தேதி உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்தை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். அது குறித்து கூறும்போது, இதுவரை தமிழகத்தில் நான் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யாத ஒரு கட்சி தலைவர் இவர் தான் என நினைக்கிறேன். எனவே இந்த முறை இவரை எதிர்த்துப் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க