July 26, 2017 தண்டோரா குழு
விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய 28 நாடுகளை கொண்டது ஐரோப்பிய யூனியன்.கடந்த 2001ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாத அமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 13 தனிப்பட்ட நபர்களும் 22 அமைப்புகளும் அடங்கும்.2006ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பும், 2003ஆம் ஆண்டில் ஹாமஸ் அமைப்பும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விடுதலைப்புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது ’2009-ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில் தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்தை நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. தடை விலகியதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் வங்கிப்பணம் விடுவிக்கப்படும்.