March 1, 2017 தண்டோரா குழு
ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறி கட்டடங்களைக் கட்டி வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இம்மையத்தின் சார்பில் 112 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இந்நிலையில், ஈஷா யோகா மையம் 1 லட்சம் சதுர அடி பரப்பை ஆக்கிரமித்துள்ளது என்று வெள்ளிங்கிரி மலை பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை புதனன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு அளித்த பதில் மனு:
மத வழிபாட்டைக் கருத்தில் கொண்டு, 19.45 ஹெக்டேர் விளைநிலத்தைத் திருத்துவதற்கு 2016 அக்டோபர் 8 மற்றும் 2017 பிப்ரவரி 15 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஈஷா யோகா மையத்துக்கு அனுமதி அளித்தார்.
ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டி வருகிறது. 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அங்கீகாரமற்ற கட்டடத்துக்கு அபராதம் வசூலிக்காததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தைத் தாக்கல் செய்யுமாறு ஈஷா மையத்திடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.