April 13, 2017 indiatimes.com
விமானத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ஒருவரது உடல் மெக்ஸிகோவில் உள்ள தனியார் மருத்துவமனையின் மாடியில் விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மெக்ஸிகோ நகரத்தின் பொது சுகாதார சேவை அதிகாரி கூறுகையில், “மெக்ஸிகோ அருகே உள்ள வடசினலோவ மாநிலத்தில் ஐ.எம்.எஸ்.எஸ். மருத்துவமனை அமைந்துள்ளது. விமானத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒருவரத்து உடல் அந்த மருத்துவமனையின் மாடியில் புதன்கிழமை(ஏப்ரல் 12) காலை 7.3௦ மணியளவில் விழுந்தது.
சினலோவ மாநிலத்தின் தலைநகரான கிலியாக்கன் நகரிலிருந்து 6௦ கிலோமீட்டர் தூரத்திலுள்ள நகரில் மேலும் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையின் மாடியில் விழுந்த உடலை தூக்கி எறிந்த அதே விமானத்திலிருந்து தான் இந்த இரண்டு உடலும் தூக்கி எறியப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்திலிருந்து தூக்கி எறிந்தபோது அவர்கள் உயிருடன் இருந்தனரா? என்று தெரியவில்லை. மாநில வழக்கறிஞர் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்தில் கூடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.” என்றார்.
சினலோவ மாநிலத்தின் துணை அட்டார்னி ஜெனரல், ஜீசஸ் மார்டின் கூறுகையில், “மருத்துவமனையின் மாடியில் விழுந்த உடலில் காயங்கள் இருந்தன. ஆனால் அந்த காயங்கள் விமானத்திலிருந்து தூக்கி வீசியதால் ஏற்பட்டது என்று உறுதியாக சொல்லமுடியாது. மேலும் எல்டோடார்டோ நகரம் போதை மருந்து கடத்தல்கார்களுக்கு பெயர் போன இடமாகும்” என்றார்.