March 17, 2017 தண்டோரா குழு
நாம் மற்றவர்களிடம் அன்பாக இருந்தால், அந்தச் செயல் நம்மை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையே மாற்றிவிடும். இதை நிரூபிக்கும் வகையில் சுவையான சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு விமான நிலையத்திற்குத் தனது 2 வயது பெண் குழந்தையுடன் வந்த தந்தை மகளுக்கு டிக்கெட் எடுக்கவில்லை. அப்போது அவளுக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான சேவை ஏஜெண்டுகள் கூறியதை அடுத்து சிறிது கலக்கமடைந்தார். காரணம், தனக்கு மட்டும் டிக்கெட் எடுத்துவிட்டு, மகளுக்கு டிக்கெட் எடுக்காமல் எப்படிப் பயணம் செய்வது என்று கவலைப்பட்டார்.
அவரது நிலையைக் கண்ட அங்கிருந்த ஒரு பெண்மணி அவரிடம் பேச்சு கொடுத்தார். அதையடுத்து அவரது மகளுக்கு 749 டாலர் கொடுத்து விமான பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்ததும் நெகிழ்ந்துபோனார்.
இச்சம்பவத்தை கெவின் லெஸ்லி என்பவர் தன்னுடைய பேஸ் ஃபுக்கில் பதிவிட்டிருந்தார்.
“ஒருவர் பயணம் செய்வதற்காகத் தன்னுடைய மகளுடன் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, விமான சேவை ஏஜெண்ட் அவரிடம் மகளின் வயது என்ன என்று கேட்டார். அப்போது, அந்த நபர் தன் மகளுக்கு 2 வயது ஆகிறது என்றார்.
அப்படியானால் அவளுக்குப் பயணச் சீட்டுள்ளதா? என்று கேட்டார் ஏஜெண்ட். குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தேவையில்லை என்று நினைத்திருந்த அவருக்கு கவலை ஏற்பட்டது. டிக்கெட் வாங்க முன்பதிவு செய்தபோது, குழந்தைக்கு ஒரு வயதுதான். இப்போது ஒரு வயதுக்கு மேல் சில மாதங்கள் ஆனாலும் பயணச் சீட்டு வாங்க வேண்டுமே. அதற்குத் தன் கைவசம் பணம் இல்லையே என்று விசனப்பட்டார். குறுகிய அவகாசத்தில் பயணச்சீட்டு வாங்க முடியாமல் தவித்தார். சிலருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது அவரது அருகில் நின்றிருந்த ஒரு பெண்மணி, அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்று சிறிது நேரம் பேசினார்.
பிறகு, இருவரும் டிக்கெட் கவுண்டருக்குச் சென்று திரும்பினர். அந்த பெண்மணி அவருடைய மகளைச் சுட்டிக்காட்டி, “அவளுக்கு ஒரு பயணச்சீட்டு வாங்குகிறேன்” என்றார். அந்த ஏஜெண்ட், “விமான பயணச்சீட்டு விலை எவ்வளவு என்று தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் “சுமார் 7௦௦ டாலர் இருக்கும்” என்று பதிலளித்தார். உடனே அந்த ஏஜெண்ட், “இல்லை, 749 டாலர்” என்றார். அதற்கு அந்தப் பெண் சிறிதும் தயங்காமல் “சரி” என்று சொல்லி, தன்னுடைய கிரெடிட் கார்டைக் கொடுத்தார்.
அப்போது அங்கிருந்த நான் “கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக’ என்றேன். அந்தப் பெண்மணியின் செயலைக் கண்ட அந்த டிக்கெட் ஏஜெண்ட் ஆச்சரியமடைந்தார். அந்த பெண்ணைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் குழந்தையின் தந்தை அவரை அன்போடு அணைத்து, நன்றியை வெளிப்படுத்தினார்.
அவருக்குப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் அவரது பெயரைக் கேட்டார். “கவலை வேண்டாம்” என்று மட்டும் அந்தப் பெண்மணி பதிலளித்தார்”
இவ்வாறு கெவின் லெஸ்லி ஃபேஸ் புக்கில் பதிவிட்டிருந்தார்.
அவரது புகைப்படத்தைப் பதிவேற்றியிருந்ததைப் பார்த்த சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் பலர் தெரிவித்தனர்.
“அந்தப் பெண்மணியின் பெயர் டேப்பி பால்டன். வீட்டைச் சுத்தம் செய்யும் பொருள்களை விற்கும் ‘நோர்வெக்ஸ்’ என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை விற்பனை அதிகாரி” என்று தெரியவந்தது.
கெவின் லெஸ்லி பதிவிட்டதற்கு ஏராளமானோர் பாராட்டி பின்னூட்டம் எழுதியிருந்தனர். “இது போன்ற தன்னலமற்ற செயல்களை செய்வார். அவரைக் கண்டு பெருமையடைகிறோம்” என்று அவருடன் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.