June 10, 2017 தண்டோரா குழு'
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு விரைவில் ராணுவப் போலீஸ் பதவி வழங்கபடும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ராணுவ தளபதி பிபின் ராவத் இந்திய ராணுவ கழகத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.அதன் பின் பிபின் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
ராணுவ போலீசில் பெண்கள் எப்படி செயலாற்றுகிறார்கள் என்பதை பார்த்த பின் நேரடி ராணுவ நடவடிக்கைகளில் அவர்களை சேர்ப்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் பின்னர் படிப்படியாக மற்ற வேலைகளுக்கு அவர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது, இந்திய ராணுவத்தில் பெண்கள் மருத்துவம், சட்டம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் போர் நடவடிக்கைகளிலும் அவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான தேர்வு நடந்து வருகிறது.ஆனால் முதற்கட்டமாக அவர்களை ராணுவ போலீசில் நியமிக்க இப்போது தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
ராணுவ போர் பிரிவிலும் பெண்கள் சேர்க்கப்படும் போது அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.