December 14, 2016
தண்டோரா குழு
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாற்றப்பட்டுள்ளார். இவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக நவம்பர் 7-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டு வந்தது. நிரந்தர நிவரானம் பெற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
டிசம்பர் 10-ம் தேதி சுஷ்மா சுவராஜிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தானமாக அளிக்க முன்வந்த சிறுநீரகங்கள் பொருந்தாத நிலையில் உரிய அனுமதியுடன் வெளிநபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது;
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல்நிலை சீரடைந்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, விரைவில் அவர் வீடு திரும்புவார்.
இவ்வாறு மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.