June 24, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள 7 கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1500 விவசாயிகளிடமிருந்து ரூ.22.01 கோடி மதிப்பில் 2078.9 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சிங்கரம்பாளையம் பிரிவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
அதன்பின், அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கொப்பரை கொள்முதல் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.தற்போது, கொப்பரை கொள்முதலை அதிகரிக்க கடந்த 2ம் தேதி முதல் தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூர் ஆகிய 2 நிறுவனங்களை புதியதாக கூடுதல் கொள்முதல் நிலையங்களாக அறிவித்து செயல்பட்டு வருகின்றன.
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110.00க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்த கொள்முதலுக்கு பிப்ரவரி முதல் ஜூலை வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கொப்பரை கொள்முதல் நிலையங்களில் இதுவரை 1500 விவசாயிகளிடமிருந்து ரூ.22.01 கோடி மதிப்பில் 2078.9 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, வேளாண்மை அலுவலர் சூர்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன், விற்பனை கூட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.