April 28, 2017 தண்டோரா குழு
தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. விவசாய கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும்.
வங்கியில் விவசாயி வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் கடன் பெற்ற விவசாயிகளின் மனைவி, மக்களை தரக்குறைவாக பேசுவது மற்றும் வீடு, நிலங்களை விற்று கடனை அடைக்குமாறு கூறுவதாலேயே விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
வங்கி அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதை அரசு கண்டிக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த கருத்துக்கும் கடும் கண்டனம்.”
இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.