April 11, 2017 தண்டோரா குழு
புதுதில்லியில் தமிழக விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் தே.மு.தி.க., மகளிரணி தலைவி பிரேமலதாவும் மண் சோறு சாப்பிட்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
பயிர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து 29 வது நாளாக விவசாயிகள் புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டி வருகின்றனர்.
தினமும் வித்தியாசமான போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் செவ்வாய்க்கிழமை மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா புதுதில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு அவர் விவசாயிகளுடன் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“விவசாயிகள் மேற்கொண்டுள்ள நிர்வாண போராட்டம் தமிழ் நாட்டிற்கு அவமானத்தை தருகிறது. புதுதில்லியில் போராடும் இவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி சந்திக்கவில்லை. அணைகள் அனைத்தும் வறண்டு உள்ளது. இவர்களுடைய பிரச்னையை தீர்க்க மத்திய அரசும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.