March 28, 2016 P.M.முகமது ஆஷிக்
உடுமலையில் சாதி மாறி திருமணம் செய்ததால் தாக்குதலுக்கு உள்ளாகி கணவரை இழந்து படுகாயமடைந்த கௌசல்யா மருத்துவமனையில் இருந்து தனது கணவர் குடும்பத்தாருடன் சென்றார்.
உடுமலைபேட்டையில் கடந்த 13 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி மீது பொது இடத்தில் வைத்து கும்பல் ஒன்று கொலை வெறித்தாக்குதல் நடத்தியது.
இதில், உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர் என்கிற இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அவரது மனைவி கவுசல்யா கோவை அரசு மருத்துமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுசல்யாவை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில், கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் அவரது அம்மா அப்பா மாமா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கௌசல்யாவின் அப்பா மாமா உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.
மேலும் அவரது அம்மாவைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவருக்குச் சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறியதை அடுத்து தனது கணவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்பவதாக கௌசல்யா தெரிவித்தார்.
இதையடுத்து இன்று கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கௌசல்யா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சங்கரின் பெற்றோருடன் உடுமலையில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றார்.